வரிவடிவப் புரட்சி
புத்தகங்களை, எண்ணங்களை டிஜிட்டல் வடிவில் சிலிகான் சில்லில் பதிவது என்பது இன்றைய நவீனகாலக் கண்டுபிடிப்பு. கணப்பொழுதில் மற்றவருடன் பகிர முடிகிறது. ஆயிரம் புத்தகங்களை சிறு சில்லில் அடக்கமுடிகிறது.
ஆகா, எழுந்தது பார் யுகப்புரட்சி.
இருக்கட்டும். இதற்கு முன்னர் இதைவிட அதிரடியான கண்டுபிடிப்பு, யுகப் புரட்சி இந்தத் துறையில் நடந்துள்ளது. என்ன அது? அச்சு இயந்திரம்? இல்லை.
அதைவிட அதிரடியாக இன்னொன்று - மனிதன் மொழிக்கு வரிவடிவம் கண்டுபிடித்தது. சொற்களை, அதாவது ஒலிக்கோவைகளை அசை அசையாகத் துண்டாக்கி, அவற்றை எழுத்து என்று ஆக்கி, ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உருவம் கொடுத்து, ஏதோ ஒன்றில் பதிந்தது. பாறையில், பானை ஓட்டில், காகிதத்தில் - என எதிலாவது.
ஒலியை எழுத்தாக்கி எழுதிவைக்க இயன்றதாலேயே, மனிதர்களின் அறிதல், புரிதல் காற்றோடு போய்விடாமல், சேகரிக்கப்பட்டது . அவை, இடம் மற்றும் கால எல்லைகளைத் தாண்டி, நின்று நிலைக்கின்றன. ஒரு தலைமுறையில் மனிதர்களின் சிறு முன்னேற்றம் அல்லது நகர்வு, அடுத்த தலைமுறையின் ஆரம்பப் படியாகிறது. அந்தத் தலைமுறை, அந்தப் படியின் மேல் இன்னொரு படி போடுகிறது. இவ்வாறு ஒவ்வாெரு தலைமுறையின் அறிவும் எழுத்தாக்கப்பட்டு, குவிக்கப்பட்டுக் குவிக்கப்பட்டு, இப்படியே ஒவ்வொரு தலைமுறையும், தன் முந்தைய தலைமுறையை விட அடுத்த படியில் பிறக்கிறது.
ஆனால், மனிதனைத்தவிர பிற உயிரினங்களில் அப்படியல்ல. ஒரு தலைமுறையின் அறிதல்கள் பதியப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் குவிக்கப்படுவதில்லை. காகத்தின் ஒவ்வொரு தலைமுறையும், ஒரே படிநிலையிலேயே பிறக்கின்றன. புலியின் ஒருதலைமுறையின் அறிவு, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை.
புலியின் பல்லும் நகமும் கண்ணுக்குத் தெரியும். ஆனால், மனிதனின் லட்சம் ஆண்டுகளாகத் தொகுக்கப்பட்ட அறிவின் ஆற்றல், கண்ணுக்குத் தெரிவதில்லை. அது அவனுக்கு இரும்பைக் கொடுத்தது, கூண்டைக் கொடுத்தது, ஆயுதங்களைக் கொடுத்தது, புலியைப் பற்றி லட்சம் ஆண்டுகளாக மனிதன் சேகரித்து மெருகேற்றியஅறிதல்களைக் கொடுத்தது. ஆகவே, புலியை மனிதன் கூண்டில் அடைத்து, கட்டணம் வசூலித்து, வேடிக்கை காட்டுகிறான்.
இந்த வரிவடிவக் கண்டுபிடிப்பே, இந்த மனித சமுதாயம் இன்று நாம் காணும் பரிணாமத்தை அடைந்ததற்கு அடிப்படை.
உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால், அதன் அதிரடி மெய்சிலிர்க்க வைக்கும். இன்றைய டிஜிட்டைசேஷன், அதற்கு ஒப்பானது இல்லை என உணரவைக்கும்.
அது சரி, புலிக்கு மட்டும் எழுத்தத் தெரிந்தால்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக