சனி, 17 ஆகஸ்ட், 2024

கிட்டப் பார்வை, தூரப் பார்வை

கிட்டப் பார்வை,  தூரப் பார்வை


கண்ணுக்கு முன்னே அது ஒரு பெரும் போர்.

நூறடி உயரத்தில் இருந்து பார்த்தால்  அது அரசியல். அது வரலாறு.  அது மதம்.  அது சுவை. அது நோய்.  அது பசி. அது வலி.  அது எதிரி.  அது உறவு.  அது அன்பு.

ஆயிரம் அடி உயரத்தில்,  அது மரணம். அது வாழ்வு.   

பத்தாயிரம் அடி உயரத்தில் அது அறிவியல்.  அது தத்துவம்

லட்சம் அடிகளுக்கு மேலே மேலே மேலே செல்ல

அது அமைதி.. அமைதி..  அமைதி..  கொஞ்சம் புன்னகை 

இன்னும் மேலே மேலே செல்ல

புன்னகையும் கரைந்து,  

வெறும் அமைதி



வியாழன், 15 ஆகஸ்ட், 2024

வீடும் குழாயும்


வீடும் குழாயும்


நூறு ஆண்டுகளுக்கு முன்னர், குழாய் வழியே வீட்டுக்குள் தண்ணீர் வர ஆரம்பித்தது.

பின்னர்  மின்சாரம் வந்தது.  

பின்னர் டிவி வந்தது.  தொலைபேசி வந்தது.

பின்னர் எரிவாயு வந்தது.  

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், டேட்டா வர ஆரம்பித்தது.

இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் குழாயில் என்ன வரும்.

இன்று இருபது வயதுக்காரன் எழுபதுவயது ஆகையில் என்ன வரும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்ன வரும்.

இருபத்தையாயிரம் ஆண்டுகளுக்குப் பின் என்ன வரும்.




செவ்வாய், 20 செப்டம்பர், 2022

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்

வலியார்முன் தன்னைநினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.


 சரி,  இந்தக் குறளுக்குப் பின்னர் வருவோம்.

பல நூற்றாண்டுகளாக, பல ஆயிரமாண்டுகளாக மனித சமுதாயம்  பல கீழ்மையான சமூக வழக்கங்களை, அமைப்புகளைக் கடைப்பிடித்து வந்திருக்கிறது.   சாதி, வருணம், பெண்ணடிமை, உடன்கட்டை ஏறுதல்,  தீண்டாமை, அடிமை முறை என இன்னும் பல.  

ஒருபிரிவினரின் சுயநலத்தின் காரணமாக, இவ்வாறு பிறப்பின் அடிப்படையில், பாலினத்தின் அடிப்படையில், இனத்தின் அடிப்படையில் மேல் கீழாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.   அதில் மேல்நிலையில் இருப்பவர்கள் லாபமடைந்து,  கீழ்நிலையில் இருப்பவர்களைச் சுரண்டிக் கொழுக்கிறார்கள்.  கீழே இருப்பவனின் உரிமைகளைப் பறித்து,  நசுக்கிக் கீழேயே வைத்திருக்கிறார்கள்.  எவ்வளவு சுயநலவாதிகளாக இருந்திருக்கிறார்கள்?

பல சீர்திருத்தவாதிகளின் முயற்சியால், புரட்சியால், இவையெல்லாம் தற்காலத்தில் மாறிக்கொண்டிருக்கின்றன.  ஆனாலும்,  நாம் மாறவேண்டியது இன்னும் இருக்கிறது.  உதாரணத்துக்கு,  சாதி ஒழிக்கப்படாமல் இருக்கிறது.  தீண்டாமை இன்னும் இருக்கிறது.  

இவையெல்லாம் முழுமையாக மாறிவிடும்போது, நாம் முற்போக்கான சமுதாயமாக ஆகிவிடுவோமா?  ஆம் .... என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.   உண்மையாகவா?

சரி, இன்றுள்ள கீழ்மைகள் எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிகின்றனவா? 

அல்லது, இன்று நாம் சரி என்று எண்ணுபவற்றை,  அல்லது இன்று நாம் தவறு என்றே நினைக்காதவற்றை,  நமக்கு ஒரு பத்துத் தலைமுறைகளுக்குப் பின்னால் வரும் சந்ததியினர் கேவலமானவையாக நினைத்தால்?  இவற்றைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் நம்மை அவர்கள், சுயநலவாதிகளாக , பிற்போக்குவாதிகளாக நினைத்தால்?    அவர்கள் அவ்வாறு நினைக்க வாய்ப்புள்ளதா?

அய்யோ,  இது என்ன கொடுமை? இவ்வளவு சீர்திருத்தங்களைச் செய்து, முற்போக்காக மாறிக்கொண்டிருக்கும் நமக்கு,   பிற்காலத்தில் அப்படி ஒரு அவப்பெயர் நேருமா?

ஆம்.  வாய்ப்பிருக்கு ராஜா, வாய்ப்பிருக்கு.  சில உதாரணங்களைப் பார்ப்போம். 

1) சொத்துரிமை.  

இன்று நாம் பெண்ணுக்கும் சொத்தில் சமஉரிமையெல்லாம் அளித்து, மிகவும் முற்போக்கானவர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சமுதாயம்,  சொத்துரிமை என்பதையே கேவலமான ஒன்றாக நினைத்தால்?    ஒருவன் தன் பெற்றோர்  சம்பாதித்த வளங்களை,  எந்த சொந்த முயற்சியுமே இல்லாமல்,  அவர்களுக்குப் பிள்ளையாய்ப் பிறந்த ஒரே காரணத்துக்காக, அந்த சொத்துக்களை அடைவது என்பதை,  அருவருப்பான விஷயமாக நினைத்தால்? 

ஒருவர் சம்பாதித்து சேமித்துவைப்பது, அவரின் உணவு, நுகர்வு, குழந்தைகளை வளர்ப்பது, மருத்துவம் போன்ற தேவைகளுக்காக.   அவரின் காலத்துக்குப் பிறகு,  மீதமுள்ள அவரது சொத்துகள்,  அவரின் தேவைகளுக்குப் போக எஞ்சி நிற்பவை.  அவை இந்த இயற்கைக்கு திருப்பியளிக்கப்பட்டு, பொதுவாகத்தான் வைக்கப்படவேண்டும், என்று நினைத்தால்?

வாரிசுரிமை என்பது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரையறைக்கு எதிராக இருக்கவில்லையா?  

இன்று சாதியடிப்படையிலான, பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளைக் களைய முற்படும் நாம்,   அதே போன்ற பிறப்பின் அடிப்படையிலான வாரிசுரிமையை மட்டும் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம்?

ஏனென்றால், இதற்கு எதிராக யாரும் இன்னும் கேள்வி கேட்கவில்லை.  புரட்சி செய்யவில்லை.   அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் பெரிதாக எழவில்லை.  நமக்குத் தோதாக இருக்கும் வரை, எல்லாம் நியாயந்தான்.

ஆனால், பிற்காலத்தில், அதற்கான சூழ்நிலை பெரிதாகும் போது, வாரிசுரிமையை வரையறுத்து வைத்திருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவர்கள் செருப்பாலடித்தால்?    

2) நீதி தேவதையின் தராசு

அந்தக் காலத்தில், மனுதர்மம் போன்றவற்றின் வழிகளில் நடைபெற்ற ஆட்சிகளில்,   ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால் அதிக தண்டனை.   பிறரைக் கொன்றால் கொஞ்சம் குறைவான தண்டனை.    ஒரு கொலையை ஒரு பிராமணன் செய்தால் குறைவான தண்டனை.  பிறர் செய்தால் அதிகமான தண்டனை.  இவ்வாறு அந்தச் சட்டங்கள், பிராமணர்களுக்குச் சாதகமாக,  பாரபட்சமாக  இருந்ததாகக் கேள்விப்படுகிறோம்.   ஏனென்றால், அவை பிராமணர்களால் இயற்றப்பட்டதால், அவர்களுக்குச் சாதகமானதாக ஆக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம்.  

இன்று அந்த பாரபட்சங்கள் நீக்கப்பட்டு, எல்லாருக்கும் ஒரே நீதிவழங்கும் சட்டங்கள் வந்துவிட்டன. 

ஆனால், உண்மையாகவே, எல்லா பாரபட்சங்களும் நீக்கப்பட்டுவிட்டனவா?   அவ்வாறு நினைக்கிறீர்களா?  

இன்று ஒருவன் இன்னொருவனைக் கொலைசெய்தால், மரணதண்டனை, அல்லது உச்சபட்ச தண்டனை.   ஆனால்,  வேறொரு விலங்கை அல்லது பறவையைக் கொலைசெய்தால், அதே தண்டனை வழங்கப்படுகிறதா?  இல்லையே.   ஏனிந்தப் பாரபட்சம்?  ஏனென்றால்,  இந்தச் சட்டங்கள் மனிதனால் இயற்றப்பட்டவை, ஆகவே, அவனுக்குச் சாதகமாகத்தான் இருக்கும்.  நீதி தேவதை கண்ணைக் கட்டிக்கொண்டு சமநீதி அளித்தாலும், முன்னால் நிற்பது மனிதனா இல்லையா என்பதை முகர்ந்துபார்த்துவிடுகிறாள்.

விலங்குகள் கேள்விகேட்பதில்லை.  அல்லது, அவற்றின் கேள்விகள் நமக்குப் புரிவதில்லை, நல்லவேளையாக.   ஆனால், இவை நம் கண்ணை, அறவுணர்வை உறுத்தவில்லையே? ஒருவேளை, பிற்காலத்தில் வரும் சமுதாயம், நம்மைவிட மேம்பட்ட அறவுணர்வு வாய்க்கப்பட்டவர்களானால்,  நம்மைக் காறி உமிழ மாட்டார்களா?  

உணவுக்காகக் கொல்லப்படுவதை விடுங்கள், ஏனென்றால்,  கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பது எல்லா உயிரனங்களுக்கும் பொதுவானது.  நாம் பேசுவது, உணவைத் தவிர பிறவற்றுக்காகக் கொல்வதற்கான  தண்டனை.


இவ்வாறு இன்று நாம் சாதாரணமாக நினைக்கும் பல விஷயங்கள், பிற்காலத்தில் கீழ்த்தரமாக எண்ணப்படலாம்.   இன்னும் பல உதாரணங்களை நீங்கள் உங்கள் மனதில் ஆராய்ந்து, திகிலடைந்து கொள்ளலாம்.   காசில்லாமல் திகில் படம்.  

ஆனால், பிற்கால மக்கள் எல்லாருமே  நம்மைக் காறி உமிழ்வார்கள், அல்லது நம் இன்றைய சட்டங்களைச் செருப்பாலடிப்பார்கள் என்ற பயப்பட வேண்டாம்.  ஏனென்றால், அப்போது நான்கு வகையான மக்கள் இருப்பார்கள்.

1) பழைய சட்டங்களைச் செருப்பாலடிப்பவர்கள்

2) பழைய சட்டங்களைப் புனிதாமானதாக்கி, எக்காலத்திலும் தூக்கிப் பிடிப்பவர்கள்

3) சமுதாய, வரலாற்றுப் பரிணாமப் பார்வையுடன் பழைய சட்டங்களை நோக்குபவர்கள்

4) பழைய சட்டங்களைப் பற்றி சரிவர அறியாதவர்கள்.

பிற்காலத்தில் மட்டுமல்ல,  இக்காலத்திலும் முற்காலத்திலும் கூட, இத்தகைய நான்கு பிரிவினர் இருக்கிறார்கள்.


இப்போது அந்தக் குறள்.  

வலியார்முன் தன்னைநினைக்க தான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.

தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும்.  (மேலும் பொருளுக்கு, இங்கே   (குறள் 250)  சொடுக்கிப் பார்த்துக்கொள்ளவும்.  )

அதுபோல, நாம் நம் முன்னோர்களின் தவறான சட்டங்களை மதிப்பிடும்போது, நம் சட்டங்களை, நம் வருங்காலத்தினர் எவ்வாறு மதிப்பிடுவார்கள் என்று மனதில் நிறுத்த வேண்டும்.




ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

வரிவடிவப் புரட்சி

 வரிவடிவப் புரட்சி

புத்தகங்களை, எண்ணங்களை  டிஜிட்டல் வடிவில் சிலிகான் சில்லில் பதிவது என்பது இன்றைய நவீனகாலக் கண்டுபிடிப்பு.   கணப்பொழுதில் மற்றவருடன் பகிர முடிகிறது.  ஆயிரம் புத்தகங்களை சிறு சில்லில் அடக்கமுடிகிறது.   

ஆகா, எழுந்தது பார் யுகப்புரட்சி.  

இருக்கட்டும்.   இதற்கு முன்னர் இதைவிட அதிரடியான கண்டுபிடிப்பு, யுகப் புரட்சி இந்தத் துறையில் நடந்துள்ளது.     என்ன அது?   அச்சு இயந்திரம்?   இல்லை.

அதைவிட அதிரடியாக இன்னொன்று - மனிதன் மொழிக்கு வரிவடிவம் கண்டுபிடித்தது.    சொற்களை, அதாவது ஒலிக்கோவைகளை அசை அசையாகத் துண்டாக்கி,  அவற்றை எழுத்து என்று ஆக்கி,    ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உருவம் கொடுத்து,  ஏதோ ஒன்றில் பதிந்தது.   பாறையில்,  பானை ஓட்டில்,   காகிதத்தில் - என எதிலாவது.   

ஒலியை எழுத்தாக்கி எழுதிவைக்க இயன்றதாலேயே, மனிதர்களின் அறிதல், புரிதல் காற்றோடு போய்விடாமல்,  சேகரிக்கப்பட்டது .   அவை, இடம் மற்றும் கால எல்லைகளைத் தாண்டி, நின்று நிலைக்கின்றன.  ஒரு தலைமுறையில் மனிதர்களின் சிறு முன்னேற்றம் அல்லது நகர்வு,  அடுத்த தலைமுறையின் ஆரம்பப் படியாகிறது.  அந்தத் தலைமுறை,  அந்தப் படியின் மேல் இன்னொரு படி போடுகிறது.    இவ்வாறு ஒவ்வாெரு தலைமுறையின் அறிவும் எழுத்தாக்கப்பட்டு, குவிக்கப்பட்டுக் குவிக்கப்பட்டு,  இப்படியே ஒவ்வொரு தலைமுறையும், தன் முந்தைய தலைமுறையை விட அடுத்த படியில் பிறக்கிறது.    

ஆனால், மனிதனைத்தவிர பிற உயிரினங்களில் அப்படியல்ல.   ஒரு தலைமுறையின் அறிதல்கள் பதியப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் குவிக்கப்படுவதில்லை.   காகத்தின் ஒவ்வொரு தலைமுறையும், ஒரே படிநிலையிலேயே பிறக்கின்றன.   புலியின் ஒருதலைமுறையின் அறிவு, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதில்லை.  

புலியின் பல்லும் நகமும் கண்ணுக்குத் தெரியும்.  ஆனால்,  மனிதனின் லட்சம் ஆண்டுகளாகத் தொகுக்கப்பட்ட அறிவின் ஆற்றல், கண்ணுக்குத் தெரிவதில்லை.  அது அவனுக்கு இரும்பைக் கொடுத்தது,  கூண்டைக் கொடுத்தது,  ஆயுதங்களைக் கொடுத்தது,  புலியைப் பற்றி லட்சம் ஆண்டுகளாக மனிதன் சேகரித்து மெருகேற்றியஅறிதல்களைக் கொடுத்தது.  ஆகவே,   புலியை மனிதன் கூண்டில் அடைத்து, கட்டணம் வசூலித்து, வேடிக்கை காட்டுகிறான். 

  இந்த வரிவடிவக் கண்டுபிடிப்பே,  இந்த மனித சமுதாயம் இன்று நாம் காணும்  பரிணாமத்தை அடைந்ததற்கு அடிப்படை.   

உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால், அதன் அதிரடி மெய்சிலிர்க்க வைக்கும். இன்றைய டிஜிட்டைசேஷன்,  அதற்கு ஒப்பானது இல்லை என உணரவைக்கும்.

அது சரி,  புலிக்கு மட்டும் எழுத்தத் தெரிந்தால்? 


செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஜெயமோகனின் யாதேவி கதையில்


ஜெயமோகனின் "யாதேவி"  சிறுகதை

https://www.jeyamohan.in/129209#.XlU5hCgzY2w



எல்லா என்ற ஐரோப்பியப் பெண் ஒருத்தி நீண்ட காலமாக பாலியல் படங்களில் பிரபலமாக இருப்பவள்,  போதைப் பொருட்களுக்கு அடிமையாகி,   நரம்புமண்டலம் நோய்வாய்ப்பட்டு,  கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையெடுத்துக்கொள்ள வருகிறாள்.   சிகிச்சையின் முதல்நாள் அவளுக்கும், ஆயுர்வேத மருத்துவன் ஸ்ரீதரனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலே கதை.


இதுவரை காமத்தின் பாலே ஆண்களை நோக்கிய,  நோக்கப்பட்ட எல்லா,   ஸ்ரீதரனையும்  அவ்வாறே நினைத்து, காமக்கரம் நீட்டுகிறாள்.   ஆனால் ஸ்ரீதரன்  வேறு வகை.

இந்தக்கதையில் ஒரு பகுதி,


“அப்படியென்றால் காமம் கொண்டிருக்கிறாய். அடக்கிக்கொண்டிருக்கிறாய்”
“இல்லை”
“நான் உன் உடலை தொட்டுப்பார்ப்பேன்”
“தேவையில்லை, என் கண்களை மட்டும் பார்த்தால்போதும்”
அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்
"நான் மருத்துவன்"


இதில்,
அவள் என்னை கூர்ந்து நோக்கினாள். பின்னர் “ஆம், விந்தைதான்… நீ யார்?” என்றாள்

இந்தவரிதான்  இந்தக் கதையில் என்னை ஆட்கொண்ட பகுதி. 

அவன் எப்படிப் பார்த்தான் என ஜெயமோகன்  வெளிப்படையாக எழுதவில்லை.  இங்கே ஒரு நிமிடம் நிறுத்தி,  அவன் பார்த்திருக்கக் கூடிய  பார்வையை மனதுக்குள்  கற்பனை செய்து பார்க்கிறேன்.

அன்பான... கனிவான... தாய் பார்ப்பது போன்ற ஒரு பார்வை.   இல்லை... தாயினும் சாலப் பரிந்த ஒரு பார்வை.  ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்குகிற ஒரு பார்வை.

அந்தப் பார்வை அவளது மனதை நெகிழ்த்திவிடுகிறது.  வியக்கிறாள்.

அவன் இவ்வாறு இருக்க இயல்வதற்குக் காரணம் அவன் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யை விரதம் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால், அந்த விரதங்கள் மட்டும் இதைக் கொடுக்கும் என நான் நம்பவில்லை.

பெண்களை அவன் பராசக்தியாகக் காண்பது காரணம் என்று தோன்றலாம்.

ஆனால்,  அப் பெண்ணின் இடத்தில்,  ஒரு ஆண் இருந்திருந்தால் கூட,  அந்த ஆணு க்கு இவன் மேல் பகை இருந்தால் கூட, ஸ்ரீதரனின் பார்வை  மாறியிருக்காது என்றுதான் நினைக்கத்  தோன்றுகிறது.

இந்த விரதங்கள்,  பராசக்தி, இவையெல்லாம்  அவனது இலக்குக்குப் பாதை வகுத்துக்  கொடுத்திருக்கலாம்.

அவற்றுக்கெல்லாம் மேலான,  அவனது  ஆழமான மானுட அன்பு ... அந்த  தரிசனத்தைத் தான் ஆசிரியர் சொல்லாமல் நமக்கு வழங்குகிறார்.   இப்படித்தான் இதை நான் உள்வாங்கிக்  கொள்கிறேன்.
















வியாழன், 5 டிசம்பர், 2019

சரணாகதி என்னும் அருமருந்து

சரணாகதி என்னும் அருமருந்து